சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர் நாய் உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது பெயர் டோகோ. இவர் சிறு வயது முதலே நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். நான் நாயாகவே பிறந்திருக்கலாம் என அடிக்கடி தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நாயாக மாற வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக அவர் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடையை உருவாக்கி உள்ளார்.
பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு நகரில் உள்ள பூங்காவில் வலம் வந்தார். பார்ப்பதற்கு நாய் போலவே தோன்றிய அவருடன் அப்பகுதியில் உள்ள நாய்கள் நட்பை வளர்த்து வருகின்றன. டோகோ, ‘ஐ வாண்ட் டு பி அனிமல்’ என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இவரது சேனலுக்கு 35 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவரது நாய் தோற்ற உடையை அங்குள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. அவரின் மொத்த அடையாளத்தையும் மறைத்து முழுமையான நாயாக மாற்றுவதற்கு 40 நாட்கள் ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டோகோ நாய் போலவே தரையில் சுற்றிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.