வீட்டிலிருந்து குறைந்த நேரம் பணியாற்றிய பெண் பணிநீக்கம்: கணினி விசை அழுத்தல் கண்காணிப்பு மூலம் சிக்கினார்

அவுஸ்திரேலிய காப்புறுதி நிறுவனமொன்றில் 18 வருடங்கள்  பணியாற்றிய பெண்ணொருவர், வீட்டிலிருந்து பணியாற்றியபோது குறைந்தளவு வேலையே செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை பணி நீக்கியமை சரியானது என அவுஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணைக்குழு தீர்;ப்பளித்துள்ளது.

சுஸி செய்கோ எனும் இப்பெண், இன்சூரன்ஸ் ஒஸ்ட்ரேலியா குரூப் (ஐஏஜி) எனும் காப்புறுதி நிறுவனத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

வீட்டிலிருந்து வேலை செய்துவந்த இப்பெண், கடந்த பெப்ரவரி மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

வேலைக்கு சமுமளிக்காமை, தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தமை, வேலை இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறியமை முதலியன இதற்கு  காரணங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் இலக்குகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்யத் தவறியதால் அந்நிறுவனத்துக்கு காப்புறுதி ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணைக்குழுவிடம் சுஸி செய்கோ முறைப்பாடு செய்திருந்தார். முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் தான் பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் தனது உளவியல் ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாக தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், இக்குற்றச்சாட்டை மேற்படி ஆணைக்குழு நிராகரித்ததுடன் நியாயமான காரணங்களாலேயே அப்பெண பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

இப்பெண் கணினியில் எந்தளவு பணியாற்றுகிறார் என்பதை கண்டறிவதற்கு விசைப்பலகையின் விசைகளை  அழுத்தும் செயற்பாடுகளை மேற்படி காப்புறுதி நிறுவனம் கண்காணித்து வந்ததுள்ளது. இதன்படி, அவர் மிகக் குறைந்த அளவிலேயே அவரின் விசை அழுத்தல்கள் இருந்தன என்பதை அந்நிறுவனம் கண்டுபிடித்தது.

இது தொடர்பான தகவல்களின்படி, 2022 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரை, அப்பெண்ணின் கணினி விசை அழுத்தல் செயற்பாடுகள் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

காலை 7.00 மணி  முதல் மாலை 4.00 மணிவரை அவருக்கு வேலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கண்காணிக்கப்பட்ட 3 மாத காலத்தில் சுஸி செய்கோ, 47 நாட்கள் தாமதமாக வேலைகளை ஆரம்பித்துள்ளார். 29 நாட்கள் முன்கூட்டியே வேலையை முடித்துக்கொண்டுள்ளார். 44 நாட்கள் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பணியாற்றவில்லை. 4 நாட்கள் அவர் ஒரு வேலையும் செய்யவில்லை என 7 நியூஸ் தெரிவித்துள்ளது.

கண்காணிக்கப்பட்ட காலத்தில் சராசரியாக மணித்தியாலத்துக்கு 54 விசை அழுத்தல்களை மாத்திரமே அவர் செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

2022 நவம்பரில் அவர் சராசரியாக மணித்தியாலத்துக்கு 34 விசைகளையே அழுத்தினார் மேற்படி காப்புறுதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022 ஒக்டோபர் மாதம் அவர் 117 மணித்தியாலங்களில் எந்தவொரு எழுத்தையும் அழுத்தவில்லை. நவம்பரில் 143 மணித்தியாலங்களும் டிசெம்பரில் 60 மணித்தியாலங்களும் எந்தவொரு விசையையும் அழுத்தவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் நிர்ணயிக்கப்பட்ட மணித்தியாலங்களைவிட குறைந்தளவு நேரமே தான் வேலைசெய்ததாக கூறப்படுவதை சுஸி செய்கோ நிராகரித்தார். சிலவேளைகளில் தான் வேறு சாதனங்களில் பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்படி தரவுகள் குறித்து தான் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறியுள்ள அவர், இத்தரவுகளின் துல்லியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

எனினும், கண்காணிக்கப்பட்ட காலத்தில் அப்பெண் நிர்ணயிக்கப்பட்ட அளவு நேரம் வேலை செய்யவில்லை என நியாயமான வேலை ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் தோமஸ் ரொபர்ட்ஸ், தீர்ப்பளித்துள்ளார்.

இச்சூழ்நிலை துரதிஷ்டவசமானது என்ற போதிலும், அப்பெண் பணிநீக்கப்பட்டமை நியாயமற்றது அல்ல என அவர் கூறியுள்ளார்.