வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும். ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:- வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது. வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார்.

வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.