ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ (Nuh). இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அங்கு ஊர்வலத்தின் மீது கல்வீசி இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பும் மோதிக் கொள்ள, அங்கு கலவரம் மூண்டது. உடனடியாக தகவல் கிடைக்க, போலீஸார் அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். அரசு, தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆக.1) காலை குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதில் மசூதியின் துணை இமாம் மவுலானா சாத் (19) உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். நூ கலவரத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். மசூதிக்கு தீ வைத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நூ கலவரம் தொடர்பாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனில் விஜ், “ஹரியாணாவின் அமைதியை கெடுக்க யாரோ சிலர் விரும்புகின்றனர். நூ மாவட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.





