கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பட்டது.
பேர்லின்(Berlin), முன்ஸ்ரர் (Münster ),ஸ்ருட்காட் (Stuttgart), டுசில்டோர்வ் (Düsseldorf), வூப்பெற்றால் (Wuppertal) , லண்டவ் (Landau), கேல்ன் (Köln), ஒஸ்னாபுறுக் Osnabrück, Landau ஆகிய நகரங்களின் மத்தியில் 83 யூலை மாத இன அழிப்பு வன்செயல்களின் காட்சிப்படுத்தல்களோடு மிகவும் உணர்வு பூர்வமாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வுகளில் முதலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, சுடர் மற்றும் மலர் வணக்கத்தோடு அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து யேர்மனிய மற்றும் பல்வேறு தேசிய இன மக்களுக்கும் துண்டுப்பிரசுங்கள் வழங்கப்பட்டதோடு, எமது இளையவர்களினால் நேரடியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
பிற்பகல் நான்கு மணியிலிருந்து மாலை ஏழு மணிவரையிலும் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகள் தெளிவு படுத்தப்பட்டதோடு, எமக்கான நீதியும் அதற்கான தீர்வும் சுதந்திர தமிழீழம் ஒன்றே என்பதனை இளையவர்கள் தெளிவாக முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை நிறைவு செய்தனர்.