மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை: பின்புலமும் தாக்கமும்

 மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. இது தொடர்பாக மே 18-ம் தேதி அன்று காங்போக்பி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வீடியோ வெளியான பிறகுதான் அச்சம்பவமும், அதன் பின்புலமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அன்றைய தினம் தங்கள் கிராமத்தை வன்முறையாளர்கள் சூறையாடியபோது அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பெண்கள் சிலர் தப்பியுள்ளனர். அதில் 3 பேர் வன்முறையாளர்கள் வசம் சிக்கியுள்ளனர். அவர்கள் மூவரின் ஆடைகளையும் கலைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர் வன்முறையாளர்கள். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ கிளிப்பில் இரண்டு பெண்கள் மட்டும்தான் காணப்படுகின்றனர்.

மனிதத்துவம் மறித்துப்போன இந்தக் கொடூரச் சம்பவம், தேசிய அளவில் பல தரப்பினரையும் கொதிப்படையச் செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதற்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்மிருதி இரானி – மத்திய அமைச்சர்: “மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை வெறிச்செயல் மனிதாபிமானமற்றது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உடன் பேசினேன். தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்” என ட்வீட் செய்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே – காங்கிரஸ் தலைவர்: “மணிப்பூரில் மனிதம் மாண்டுவிட்டது. மோடி அரசும், பாஜகவும் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் வன்முறை வெறி ஆட்டமாக மாற்றி உள்ளனர். பிரதமர் மோடியின் ஆழ்ந்த அமைதியை இந்தியா மறக்காது, மன்னிக்காது. இப்போதும் அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

ராகுல் காந்தி – முன்னாள் காங்கிரஸ் தலைவர்: “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றத் தன்மைதான் மணிப்பூரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தியா அமைதியாக காக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ காட்சியை பகிர வேண்டாம் என ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவு: பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான காரணத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியை பகிர வேண்டாம் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலவரத்தின் பின்னணி: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.