அதிமுக மாநாடு அச்சத்தால் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதமா? – அமைச்சர் ரகுபதி மறுப்பு

“நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் இரட்டை வேடமோ, இரட்டை நிலைப்பாடோ எடுக்கவில்லை” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. இதைப் புரியாதவர்கள், இரட்டை நிலைப்பாடு என்று கூறினால், அவர்கள்தான் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

எங்களுடைய நிலைப்பாடு ஒன்றுதான், நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. அது பொதுப் பட்டியலில் இருப்பதால், அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் தனது சுதந்திர தின விழா உரையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் இரட்டை வேடமோ, இரட்டை நிலைப்பாடோ எடுக்கவில்லை” என்றார்.

அப்போது அவரிடம், மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டைக் கண்டு பயந்து திமுக நீட் தேர்வைக் கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யார் பயப்படுகிறார்கள்? அதிமுக மாநாட்டுக்கு கூட்டம் வராது என்று இப்போதே பயம் வந்துவிட்டது. அதிமுகவினர் திருப்பரங்குன்றம், அழகர் கோயில், மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வரலாம் என்று மக்களை அழைத்துக் கொண்டுள்ளனர். அதற்கே மக்கள் செல்ல மாட்டேன் என்கிறார்கள் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.

நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம். திமுகவினர் யாரும் அங்கு செல்லப் போவது இல்லையே. பொதுமக்களும் அதிமுக மாநாட்டுக்கு செல்ல மாட்டார்கள். அவர்கள் கட்சியில் தொண்டர்கள் யாரும் இல்லை என்பதுதான் அர்த்தம். எனவே, எடப்பாடி பழனிசாமி கூறுவது அர்த்தமில்லாத குற்றச்சாட்டு” என்று அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்றின்
பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 15 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டைக் கண்டு பயந்த திமுக, என்ன செயவது எனத் தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்” என்று கூறியிருந்தார்.