இன, மத ரீதியில் பிரிக்கப்பட்ட நாடாக நாம் இருக்க முடியாது

இனம், மதம் அல்லது வெவ்வேறு பழங்குடியினரால் பிரிக்கப்பட்ட ஒரு நாடாக நாம் இருக்க முடியாது. வேற்றுமையின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும். எமது பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் நினைவுகள் அனைத்தும், சிங்கப்பூர் அடையாளத்தின் வலுவான உணர்வை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு குழுவும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவதில்லை. ஆனால் இது அனைவருக்குமான முறை என்ற உணர்வு உள்ளது என்று சிங்கப்பூரின் பிரதி பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் ‘தீவிர போட்டி’ நிலை, உலகப் பொருளாதாரத்துக்கு ‘பேரழிவு’ நிலையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாடு ஏதாவது செய்தால் மற்றொரு நாடு பதிலடி கொடுக்க முடியும்.

பாதுகாப்பு என்று வரும்போதுநாடுகள் பொதுவாக சில ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைப் பற்றி அறிந்திருந்தன. ஆனால் இருதரப்பு மோதல்களில் நிதி பிரயோகத்தை பயன்படுத்துவதில் உலகத்துக்கு அதிக அனுபவம் இல்லாததால் தற்போதைய அமெரிக்கா – சீனா போட்டியினால் ஏற்படும் ‘சேதம்’ தெரியாமல் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் கொள்கை கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூரின் மெரினா பே கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்ற தலைவிதியை மீண்டும் கண்டுபிடித்தல் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே சிங்கப்பூரின் பிரதி பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் தந்தையான முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை இந்த மாநாடு நடைபெற்றது. அங்கு நெறியாளர் மற்றும் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதி பிரதமர் மற்றும் நிதியமைச்சர் லோவ்ரன்ஸ் வோங் பதிலளித்தார்.

உலகின் தற்போதைய புதிய நிலைமைகள் மற்றும் சவால்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூரின் பிரதி பிரதமர் லோவ்ரன்ஸ் வோங் புதிய சவால்கள், நம்மைச் சுற்றி நிறைய நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன.

புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார துண்டாடுதல், தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும் சமாளிக்கவேண்டிய பல விடயங்கள் நிறைந்த உலகை நாம் பார்க்கிறோம். ஆனால், நாம் கவலைப்படவேண்டிய சிதைவுகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.

முதலாவதாக, உலகளாவிய பலதரப்பு வர்த்தக அமைப்பு முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. மற்றும் கடந்த சில தசாப்தங்களாக சுதந்திர வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்தை கண்டோம். பொருளாதார ஒத்துழைப்புக்குள் நாடுகள் ஒன்றுடன் ஒன்று வர்த்தகம் செய்ய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை.

உண்மையில், நாங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை அல்லது அதிக ஸ்திரத்தன்மையை ஊக்குவித்தோம். இப்போது அந்த ஒருமித்த கருத்து முடிந்துவிட்டது. என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று விளக்கமளித்தார்.

‘மூலோபாய ஈடுபாடு மற்றும் உலகளாவிய அமைப்பில் சீனா ஒரு பொறுப்பான பங்குதாரராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா பேசுகிறது. ஆனால் அந்த அணுகுமுறை தோல்வியுற்றது. சீனாவின் எழுச்சி அமெரிக்காவின் நலன்கள் மற்றும் மதிப்புகளை அச்சுறுத்துகிறது என்ற உணர்வு இப்போது அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது.

எனவே, நாங்கள் மூலோபாய ஈடுபாட்டிலிருந்து மூலோபாய போட்டிக்கு மாறிவிட்டோம். ஆனால், அந்த வெளிப்படையான மோதல் காரணமாக இரு தரப்பும் போருக்கு செல்ல விரும்பவில்லை. ஆனால் கணிக்க முடியாத அல்லது ஆபத்தான விளைவுகளுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த புதிய சூழலில் நாம் மாற்றியமைத்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், கருமையான மேகங்களிலும் வெள்ளிக் கோடுகள் இருப்பதை நாம் பார்க்கவேண்டும்.

எனவே புதிதாக இருக்கும் இந்த புதிய சூழலில் கூட நம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கு புதிய வாய்ப்புகள் இருக்கும்’ என்றும் சிங்கப்பூரின் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை சிங்கப்பூரில் பல இனங்கள் நல்லிணக்கமாக வாழ்கின்றமை குறித்து விளக்கமளித்த பிரதி பிரதமர் இனம், மதம் அல்லது வெவ்வேறு பழங்குடியினரால் பிரிக்கப்பட்ட ஒரு நாடாக நாம் இருக்க முடியாது.

வேற்றுமையின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும்.

இந்தக் கொள்கைகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது கடினமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில், அதன் பலன்களைப் பார்த்தோம். எமது பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் நினைவுகள் அனைத்தும், சிங்கப்பூர் அடையாளத்தின் வலுவான உணர்வை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு குழுவும் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவதில்லை. ஆனால், இது அனைவருக்குமான முறை என்ற உணர்வு உள்ளது என்று கூறினார்.

சிங்கப்பூரில் சீனர்கள், மலே மக்கள் மற்றும் இந்தியர்கள் வாழ்கின்றனர். சகல விடயங்களிலும் சகல மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் ஆங்கிலம் அலுவலக மொழியாக உள்ளது.

‘எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்கும் எதிர் கருத்துக்கள் இருக்கும். அது எதிர்ப்பாளர்களாக இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கும். எமக்கு முக்கியமானது, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எது சரியானது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதாகும். நீண்ட காலத்துக்கு இது சரியான விடயம் என்று மக்களை இனிமையாக நம்ப வைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் தொடர்வோம்’ என்றும் சிங்கப்பூர் பிரதி பிரதமர் கூறுகிறார்.

இதேவேளை சிங்கப்பூரில் அண்மையில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டமை, திருமணத்துக்கு அப்பாலான உறவு குறித்த சிக்கலில் சிக்கிய நிலையில் சபாநாயகர் பதவி விலகியமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் பிரதி பிரதமர் நாங்கள் இவற்றிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

நம்பிக்கையை வளர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் இடையேயான நம்பிக்கையின் உயர் அடித்தளம் இன்னும் இருக்கிறது. அது இன்னும் இருக்கிறது. ஆகவே, எனது உடனடி முன்னுரிமை என்னவென்றால், தேர்தலுக்குச் செல்லும்போது, சிங்கப்பூரர்களின் நம்பிக்கையையும் ஆணையையும் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்வதுதான் என்று குறிப்பிட்டார்.

அண்மையகால தவறுகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பிரதி பிரதமர் நான் ஒரு குறிப்பிட்ட சமநிலை உணர்வைக் கற்றுக்கொண்டேன்.

அரசாங்கத்தில், விடயங்கள் சரியாக நடக்கும்போது நாங்கள் முதல் இடத்தில் இருக்கின்றோம். அதேசமயம், சவால்கள் வரும்போதும், பின்னடைவுகள் வரும்போதும், எதுவுமே சுமுகமாக இல்லாமல் போகும்போதும் அவை தவறுகளாகவே இருக்கும். இதற்கு முன்பும் எமக்கு நியாயமான பின்னடைவுகள் ஏற்பட்டபோது, சமீபகாலமாக, இந்த பின்னடைவை சந்தித்தபோது, பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம். நாம் சவால்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம்’ என்று கூறினார்.

‘தற்போதைய உலகளாவிய போக்குகளைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். தடையற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைச் சுற்றி உலகளாவிய ஒருமித்த நிலையில் மாற்றம் உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

உதாரணமாக, அமெரிக்கா, சீனாவிலிருந்து குறைவான கார்களை இறக்குமதி செய்து மெக்சிகோவில் இருந்து அதிக கார்களை இறக்குமதி செய்யலாம். ஆனால், சீனாவின் உற்பத்தி முறையை மாற்றும் திறன் மெக்சிகோவிடம் இல்லை.

மேலும், மெக்சிகோ அமெரிக்காவுக்கு அதிக கார்களை ஏற்றுமதி செய்ய விரும்பினால், அவர்கள் சீனாவில் இருந்து இன்னும் அதிகமான மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை கூறுகளை இறக்குமதி செய்ய வேண்டும். எனவே பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அது அர்த்தமற்றது’ என்று குறிப்பிட்டார்.