தொலைந்து போன நாயை மைக்ரோசிப் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த குடும்பத்தினர்

வீட்டு உரிமையாளர்களுக்கு அசைக்க முடியாத அன்பையும், பாசத்தையும் வழங்குவதில் நாய் சிறப்பு வாய்ந்தது. பாசமாக வளர்க்கும் நாய் தொலைந்து போனால் அந்த வீடே சோகத்தில் மூழ்கி விடும். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த சுமித் என்பவர் ஜில் என பெயரிடப்பட்ட நாயை பாசமாக வளர்த்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாய் தொலைந்து போனது.

இதனால் சுமித்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் நாய் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சமூக வலைதளங்களிலும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினர். ஆனாலும் நாய் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த நாய் மீது மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலமும் தேடிய நிலையில், சமீபத்தில் சுமித் குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் அவர்களது வளர்ப்பு நாய் ஜில் இருக்கும் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற அவர்கள் தங்கள் நாயை மீட்டனர்.

மைக்ரோ சிப் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு நாய் மீண்டும் கிடைத்ததால் சுமித்தின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.