பொய்கூறி புகலிடம் பெற உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு நடவடிக்கை

பிரிட்டனில் பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளை நீதியின்முன் நிறுத்தப்போவதாக அந்நாட்டின் உள்துறை செயலாளர் (உள்துறை அமைச்சர்) சுவெல்லா பிரேவர்மன் சூளுரைத்துள்ளார். இதற்கான செயலணியொன்றையும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடம் கோருவதற்கு உதவும் சட்டத்தரணிகள் குறித்த செய்திகள் வெளியானதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், உள்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மன் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “பெரும்பான்மையான சட்டத்தரணிகள் நேர்மையாக செயற்படும் நிலையில், முறைமையை சட்டவிரோத குடிவரவாளர்கள் சுரண்டுவதற்கு சிலர் உதவுகின்றனர் என்பதை நாம் அறிவோம்.

சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விரும்புகின்றனர். ஒழுக்கமற்ற சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டவிரோத படகுகளை நிறுத்துவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன்” எனக் கூறினார்.

இதேவேளை, இத்தகைய சட்டத்தரணிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு பலமான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு தான் உதவவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தல் அமைப்புகள், சட்ட அமுலாக்கல் அணிகள் மற்றும் அரசாங்கத் திணைக்களங்களை பிரித்தானிய அரசின் மேற்படி செயலணி ஒன்றிணைத்து செயற்படவுள்ளது.

ஆயுட்கால சிறைத்தண்டனை

மோசடியான முறையில் தங்கியிருப்பதற்காக குடியேற்றவாசிகளுக்குப் பயிற்சியளிக்கும் சட்டத்தரணிகளுக்கு எதிராக, பிரிட்டனின் 1971 ஆம் ஆண்டின் குடிவரவு சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட முடியும். இக்குற்றத்துக்கு ஆயுட்கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட முடியும்.

அதேவேளை, நீதிமன்றத்தை சட்டத்தரணிகள் ஏமாற்றுவதை பிரித்தானிய சட்டத்தரணிகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தடுக்கிறது. நேர்மையற்ற சட்டத்தரணிகள் அத்தொழிலிலிருந்து நீக்கப்படலாம்.

எனினும், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும் குடிவரவு ஆலோசகர்களைக்  கையாள்வதற்கு போதுமான அதிகாரங்கள் ஏற்கெனவே உள்ளன என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ‘சட்டத்தரணிகள் சமூகம்’ தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் பரிசீலனைகளின் தேக்கநிலை மற்றும் சட்டவிரோத குடிவரவு சட்டத்தின் நடைமுறையசாத்தியமற்ற தன்மை ஆகியன குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சிறியதொரு எண்ணிக்கையான சட்டத்தணிகள் குறித்து உள்துறை அலுவலகம் கவனம் செலுத்துகிறது எனவும் சட்டத்தரணிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

170,000 இற்கு அதிகமான புகலிடக் கோரிக்கை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளதிலிருந்து கவனத்தை திருப்புவதற்காக உள்துறை அலுவலகத்தின் மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

‘மோசடியாளர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், அவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையானோரே. இதனால்தான், நாம் நடைமுறை சாத்தியமான, தெளிவான, செயற்படக்கூடிய திட்டமொன்றைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம்’ என தொழிற்கட்சியின் நிழல் போக்குவரத்துச் செயலாளர் லூயிஸ் ஹை கூறியுள்ளார்.

75,492 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள்

 

2023 மார்ச் வரையான ஒரு வருட காலத்தில் 91,047 பேர் தொடர்பான 75,492 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது முந்தைய ஒரு வருட காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களைவிட 33 சதவீதம் அதிகம் என்பதுடன் கடந்த 20 வருடங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆகக்கூடுதலான விண்ணப்பங்களாகும்.

மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்களில் சிறிய படகுகள் மூலம் வந்தவர்கள் 44 சதவீதம் ஆகும்.

அல்பேனியர்கள் முதலிடம் 

கடந்த மார்ச் வரையான ஒரு வருடத்தில் பிரிட்டனில் புகலிடம் கோரிய பிரதான விண்ணப்பதாரிகளில் அல்பேனியர்கள் (13,714 பேர்) முதலிடம் வகிக்கின்றனர்.

இவர்களுக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா, ஈராக், பங்களாதேஷ், சிரியா, சூடான், எரித்திரியா, பாகிஸ்தான் நாட்டவர்கள் உள்ளனர்.

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படவும் முடியும். கடந்த மார்ச் இறுதியில் பல்வேறு தடுப்பு நிலையங்களில் 1,591 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த மார்ச் இறுதி வரையான  ஒரு வருட காலத்தில், குடும்ப அங்கத்தினர்கள் உட்பட 22,648 பேருக்கு புகலிடம் வழங்கப்பட்டதாக பிரித்தானிய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை ஆபிரிக்காவின் ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முயற்சித்தது. அது சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்த நிலையில், பாரிய தெப்பமொன்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் நடவடிக்கையை அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பித்தது.